மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆலையை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22-ம் தேதி இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018 மே 28-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து 42 நாட்களுக்கும் மேலாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2020 ஆக.18-ம் தேதி பிறப்பித்த 815 பக்க விரிவான தீர்ப்பில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்பதால், ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என தீர்ப்பளித்து இருந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ஆலைக்கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தபுகைப்படங்களை நீதிபதிகளிடம் காண்பித்தனர். ‘‘கடந்த 20 ஆண்டுகளாக இந்தஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதால்தான் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலைக்கழிவுகள் நிலத்தடி நீருடன் கலந்துவிட்டது. சமீபத்தில்தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும், காற்று மாசடைந்ததற்கும் இந்த ஆலையே முக்கிய காரணம். இதுதொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதால் ஆலையை மூடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’’ என வாதிட்டார்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘‘இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள்மறுக்கிறோம். ஆலையில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதை மறுக்கவில்லை. அதைமுழுமையாக கட்டுப்படுத்தி விட்டோம். ஆனால், ஆலைக்கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டது என்பதை மறுக்கிறோம். ஜிப்சம் கழிவுகள் 40 ஏக்கர் பரப்பில் குளம் வெட்டி பாதுகாக்கப்பட்டு சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. தாமிரக்கழிவுகள் சாலை அமைக்கப் பயன்படுகிறது. கடலுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் சோடியம் குளோரைடு உள்ளிட்ட தாது உப்புக்கள் அதிக அளவில் இருக்கத்தான் செய்யும். ஆலையை மூடிதமிழக அரசு பிறப்பித்த உத்தரவு அரசியல் உள்நோக்கம் கொண்டது’’ என்றார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘ஆலையை சுற்றிலும் பசுமைவெளிகள் அமைக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் அமைத்த குழு ஆய்வு செய்தபோது, கழிவுகளை கையாள உரிய கட்டமைப்புகள் இல்லை என்றும், சுற்றுச்சூழல் மாசு கடுமையாக உள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது. இப்போதுவரை நிலத்தடி நீரில் எந்த முன்னேற்றமும் இல்லை’’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மாசு மற்றும் தாமிரக்கழிவுகளை கையாண்ட விதம் மிகவும் கவலைக்குரியது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சரியான, விரிவான தீர்ப்பைத்தான் அளித்துள்ளது என்பதால் அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் எந்த வரம்பு மீறலும் இருந்ததாக தெரியவில்லை. விதிமீறல்கள் காரணமாகவே தமிழக அரசு அந்த ஆலையை மூடி உத்தரவிட்டுள்ளது. எனவே, ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது. அந்தநிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், இந்த வழக்கை திறம்படவிசாரித்த சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours