100 நாள் வேலை திட்டத்தில் 10 வாரம் ஊதியம் வழங்கவில்லை!

Spread the love

இந்தியா முழுவதும் கடந்த 2005-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாய பணிகள் இல்லாத காலங்களில் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தினசரி ஊதியமாக ரூ.294 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது சுமார் 10 வாரங்கள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.17,000 கோடி நிலுவை: இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் கு.ரவீந்திரன் கூறியதாவது: பருவமழை மாறுபாடு காரணமாக விவசாய பரப்பும், விவசாயிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் 100 நாள் வேலையின் தேவை அதிகரித்துள்ளது. இத்திட்டத்தில் பெண்கள் தான் 98 சதவீதம் பணியாற்றுகின்றனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 92.86 லட்சம் பேருக்கு வேலை உறுதித் திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 76.15 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தில் நாடு முழுவதும் வழங்க வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி ஊதியம் நிலுவையில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

நிதி குறைப்பு: கடந்த 2021-22-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 22-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரம் கோடியாகவும், 23- 24-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த நிதியாண்டுக்கு ரூ.4,118 கோடி மட்டுமே ஊதியம் விடுவிக்கப் பட்டுள்ளது. இன்னும் ரூ.3,000 கோடி பாக்கி கொடுக்கப்படாமல் உள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 8 வாரம் முதல் 13 வாரம் வரை சம்பளம் வழங்காமல் இருந்தனர். தீபாவளி நெருங்கியபோது, ஊதியம் வழங்காததை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின் 2 முதல் 3 வாரங்களுக்கான ஊதியம் வழங்கினர். சுமார் 10 வாரங்களுக்கான சம்பளப் பணம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இத்திட்ட தொழிலாளர்கள் பலரும் வேலைக்காக நகரத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

துணை பட்ஜெட்: இந்த திட்டத்தில் இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 11 கோடி பேர் வேலையிழக்கக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை பட்ஜெட் தாக்கல் செய்து நிதி ஒதுக்கிவிடுகிறோம் எனக் கூறினார். ஆனால், இதுவரை துணை பட்ஜெட்டும் தாக்கல் செய்யவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை. மத்திய அரசு உடனடியாக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நிதியை ஒதுக்கி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours