தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயம் என்பதால் பல்வேறு ஊர்களில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையிலும் பட்டாசு தயாரிக்கும் வேலை மும்முரமாக நேற்று நடைபெற்றது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் ஊர்மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால், பட்டாசு தயாரிப்பு ஆலை அருகே குடோனிலும் அதிக பட்டாசு, வெடி மருந்து இருந்ததால் சுமார் 3 மணி நேரமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் மீட்பு பணிகளில் இடையூறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு சரக்கு வாகனம் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமானது.
பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தீக்காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைக்காக 5 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், தமிழக அரசு சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையையும் அறிவித்தார். இந்த தொழிற்சாலை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகனை நேற்று தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டாசு ஆலை விபத்து காரணம் குறித்து விபத்தில் தப்பிய சக ஊழியர்கள் தனியார் செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில், தொழிற்சாலைக்கு புதிதாக வேலைக்கு வந்த பெண்கள் தவறுதலாக பட்டாசு பெட்டியை இழுத்த காரணத்தால் அதிலிருந்த வெடி மருந்துகள் உராய்வு ஏற்பட்டு தீ பற்றியதாகவும் அதனால் விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு மூலப் பொருட்கள் ஆலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்ததும் இந்த தீ விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான உண்மை காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என நேற்று, காவல்துறை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா செய்தியாளர்களுக்கு தெரிவித்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், விபத்து குறித்து அறிந்த உடன் அருகாமையில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, 9.30 மணியளவில் காயமடைந்தவர்களை மீட்க ஆரம்பித்து விட்டார்கள் என தெரிவித்தார்.
+ There are no comments
Add yours