அரசாணையை அமல்படுத்த முடியாது… அதிரடியாக தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் !

Spread the love

ஏலம் மூலம் வாங்கிய சொத்துக்களுக்கான விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால், அடமானமாக வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் மூலம் வாங்கியவர்கள், அதற்காக வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழை பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்ய விண்ணப்பித்தனர். இதில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விற்பனை சான்றிதழை பதிவு செய்ய 7 சதவீத முத்திரைத்தாளும், 4 சதவீத பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், சில விண்ணப்பங்கள் மீது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்தும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஏலம் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கான விற்பனைச் சான்றிதழை பதிவு செய்ய முத்திரை தாள் கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பதிவு செய்வதற்காக 11 சதவீத கட்டணம் வசூலிப்பது என அரசு முடிவெடுத்து கடந்த மார்ச் 23ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணங்களை நேரடியாக வசூலிக்க முடியாததால், சான்றிதழை பதிவு செய்வதற்கான கட்டணம் என மறைமுகமாக 11 சதவீத கட்டணம் வசூலிக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இதை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மனுதாரர்களின் விற்பனைச் சான்றிதழ்களுக்கு கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்காமல் பதிவு செய்ய வேண்டும் எனவும், பதிவு செய்வதற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours