திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருந்து வருகிறது.
திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளம் அடித்துச்செல்லப்பட்டதால் 4 நாட்களுக்கு பிறகு, ரயிலில் இருந்த 1,000 பயணிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே 2 நாட்களுக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து இரவு சிறப்பு ரயில்மூலமாக நேற்று மதியம் 1.05 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை ஆகிய விரைவு ரயில்கள் உட்பட 12 ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours