நாயை பிடிக்க வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்தால் 15 மணி நேரம் பதுங்கியிருக்கும் சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானியங்கி கேமராவை பயன்படுத்தி வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் தீபாவளியையொட்டி, அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்போது, நாயை பிடிப்பதற்காக வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளதுள்ளது. நேற்று காலை வீட்டிற்குள் புகுந்த அந்த சிறுத்தை, 15 மணி நேரமாகியும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், மூன்று சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவை பயன்படுத்தி சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். அத்துடன், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் கூறுகையில், “இன்று இரவுக்குள் சிறுத்தை வெளியேறும் என நம்புகிறோம். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம்” என்றார்.
+ There are no comments
Add yours