சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2022-ம் ஆண்டு ஆக.24-ம் தேதி 14-வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
அதன்படி, அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த ஊதிய ஒப்பந்தமும் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதனால் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன.
இது தொடர்பான தொழிலாளர் துறையின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஆக.27-ம் தேதி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டுநர் சார்பில் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையானது, ஆக.27-ம் தேதி காலை 11 மணிக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் சார்பாக ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours