கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரானா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது தற்போது வரை இந்திய அரசியலில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவரது கருத்துக்கு பலரும் ஆதரவும் அளித்தனர். இதுபோன்று சனாதனம் குறித்த பேச்சு பல இடங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சனாதனம் எதிர்ப்பு குறித்து மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துகளை மாணவர்கள் பேச வேண்டும் என்று திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் ராஜாராமன் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சனாதன எதிர்ப்பு கருத்துக்களை 15ம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பேச வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சனாதனம் எதிர்ப்பு பற்றி கருத்து கூற மாணவர்களுக்கு திருவாரூர் திருவிக அரசு கல்லூரி முதல்வர் அழைப்பு விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சனாதனம் தொடர்பாக மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட 2 சுற்றறிக்கைகளையும் கல்லூரி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.
இதுகுறித்து தற்போது வெளியான அறிக்கையில், “திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, பொறுப்பு முதல்வர் முனைவர்.திரு.பி.ராஜாராமன் அவர்களால் 12.09.2023 மற்றும் 13.09.2023 ஆகிய தினங்களில் அனுப்பப்பட்ட சனாதனம் கருத்தரங்கு குறித்த சுற்றறிக்கைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகிறது என அறிவிக்கலாகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours