தமிழ்நாட்டில் உள்ள 26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது வினாக்கள் விடைகள் நேரத்தில், நாகர்கோவில் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் விடுதி கட்ட அரசு முன்வருமா எனவும், அதே போன்று 1700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரக்கூடிய நிலையில் போதிய அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதாகவும், ஆய்வகங்கள், கணினிகள் மற்றும் முதுகலை அறிவியல் பாடப் பிரிவுகளை தொடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நாகர்கோவில் தொகுதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கட்டிடம் கட்டுவது குறித்து ஆய்வு செய்து தேவைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்
மேலும், அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1794 மாணவர்கள் படித்து வருவதாக தெரிவித்த அவர், ரூ.1000 கோடி செலவில் காமராஜர் பெயரில் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளதாகவும், குறிப்பாக 26 பாலிடெக்னிக் கல்லூரிகள், 55 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தேவைக்கேற்ப ஆய்வகங்கள், வகுப்பறைகள், கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 262 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக தேவைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours