தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 25-க்கும் மேற்பட்டோர் இன்று (புதன்கிழமை) காலை பாதயாத்திரையாக நடந்து சென்ற போது அவர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, கண்ணுக்குடி பட்டியையைச் சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக, தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது. இதில், அதே ஊரைச் சேர்ந்த சின்னையன் மகன் முத்துசாமி,(60), கார்த்திக் மனைவி மீனா(26), முருகன் மனைவி ராணி(37), ரமேஷ் மனைவி மோகனாம்பாள் ஆகிய 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய 2 பேரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக செங்கிப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours