7-ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி அடியெடுப்பதை அடுத்து, மக்களவைத் தேர்தல் கூட்டணி மற்றும் சீட்டு ஒதுக்கீடு தொடர்பான நல்ல சேதி இன்றைக்குள் வெளியாகும் என தொண்டர்கள் காத்துள்ளனர்.
நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கட்சியின் தொண்டர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றான அரசியல் வரவாக அறிமுகமான மக்கள் நீதி மய்யம் கட்சி, அது உதயமான வருடத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. தமிழக அரசியலில் உரிய ஆளுமைகள் இன்றி வெற்றிடம் நிலவியதாக சொல்லப்பட்டது, கமல் ஹாசன் மீதான எதிர்பார்ப்பு, அவர் உருவாக்கிய நம்பிக்கைகள் என பலவும் மக்கள் நீதி மய்யம் பக்கம் திரளாக தொண்டர்களை சேர்த்தது.
மக்களவை, சட்டப்பேரவை என அடுத்தடுத்த தேர்தல்களை சந்தித்ததும், குறிப்பிடத்தக்க வகையில் வாக்காளர்களை கவர்ந்ததும் மநீம கட்சிக்கு பெருமிதம் தந்தது. ஆனால் தொகுதிகளில் வெற்றியை ருசிக்காததும், கூட்டணி தொடர்பாக தவறான முடிவுகளை எடுத்ததும், கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகள் கழன்றதுமாக அமில சோதனையை மநீம எதிர்கொண்டது.
தற்போது அதிகாரபூர்வமற்ற வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மய்யம், கமல் ஹாசனுக்கான ஒற்றை சீட்டு ஒதுக்கீட்டில் பெரும் இழுபறியை சந்தித்துள்ளது. இதனால், திமுகவுடன் மனக்கசப்பில் கமல் இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளில் அவர் போட்டியிடப்போவதாகவும் தகவல்கள் கசிந்தன.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல் ஹாசன், ’2 நாட்களில் நல்ல சேதி சொல்கிறேன்’ என்றார். அதன்படி மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்றைய தினம் மேற்படி நல்ல சேதி வெளியாகும் என மநீம தொண்டர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் காத்துள்ளனர்.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.
கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்கவிழாவினை முன்னிட்டு கமல் இன்று காலை பகிர்ந்த செய்தியில், ‘மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த பதிவு, மக்களவை சீட்டு ஒதுக்கீட்டின் எதிர்மறை சூழலை கமல் சுட்டிக்காட்டுவதாக, மய்யத்தின் தொண்டர்கள் வழக்கம்போல தெளிவாக குழம்ப வழி செய்திருக்கிறது.
+ There are no comments
Add yours