மதுரை: தெலுங்கு சமுதாய பெண்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
தமிழக நாயுடு மகாஜன சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் சுருதி ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், ‘தமிழகத்தில் மொழி, இன பாகுபாடின்றி அமைதி, ஒற்றுமையுடன் வாழும் தெலுங்கு பேசும் நாயுடு குல சமுதாய பெண்களை இழிச்சொல் கூறியும், நாடாண்ட மன்னர்களை இழிவுப்படுத்தும் நோக்கிலும் நடிகை கஸ்தூரி சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் எண்ணத்தில் பேசிய அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நவம்பர் 10-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, மதுரை திருநகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். இதன்படி, நடிகை கஸ்தூரி மீது 352, 353 பிஎன்எஸ், 294 (பி) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் திருநகர் காவல் நிலையத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே கஸ்தூரி மீது சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours