திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 73.31 லட்சம் மதிப்பிலான 1,074 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், பயணி ஒருவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்து வருகின்றனர். இருந்தும் அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) என்ற பயணியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.73.31 லட்சம் மதிப்பிலான 1,074 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours