திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிலை பிரதிஷ்டை செய்த மறு நொடியே கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், கோம்பைப்பட்டி கிராமம் அய்யா பட்டியில் ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர், நாகம்மாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோயில் பூசாரி முத்துசாமி மற்றும் ஜெயகிருஷ்ணன் தலைமையில் 15 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் மூன்று கால யாக பூஜையானது நடைபெற்றது.
இந்நிலையில், இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலிகை யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க தீர்த்த குடங்கள் கலசம் நோக்கி புறப்பட்டது.
பின்னர் கருட தரிசனம் முடிந்து மகா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, அதிகாரிப்பட்டி, அஞ்சுகுளிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக முதல் கால யாக பூஜை துவங்கி ஜடாமுனிஸ்வரர் மற்றும் நாகம்மாள் சிலை பிரதிஷ்டை செய்த போது கருவறைக்குள் நல்ல பாம்பு குடி புகுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பக்தி பரவசத்தில் ஆச்சரியத்துடன் கைகூப்பி வணங்கி அருளாசி பெற்றனர்.
+ There are no comments
Add yours