’’எடப்பாடி இருக்கும் அணியில் நாம் இருக்க வேண்டுமா என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்புகிறார்கள், இரண்டு கூட்டணிகள் மீதும் அதிருப்தி இருப்பதால் தனித்து களமிறங்கலாம் என்று கூறுகிறார்கள்’’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக அடுத்தடுத்து கண்ட தேர்தல் தோல்வியால் துவண்டுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் நிச்சயம் பாஜக கூட்டணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலை, அமமுகவை கூட்டணி சேர்க்கக் கூடாது என அதிமுக உறுதியாக இருந்ததால் அதுவும் தற்போது நழுவி விட்டதாக டிடிவி தினகரன் தனது பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ‘’மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாம் இருக்க வேண்டுமா? அதற்கு நாம் இசையக் கூடாது என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தான் முடிவெடிக்க முடியும். நாங்கள் ஏற்கெனவே தனித்து நின்றவர்கள் தான். இந்த முறை அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றாக அமமுக இருக்கும் என்பதை உணர்ந்து மக்கள் எங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்’’ என தெரிவித்தார்.
டிடிவி தினகரனின் இந்த பேட்டியின் மூலம் தட்டிய கதவுகள் அனைத்து மூடப்பட்டதால் இந்த முறை மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்து களம் காண்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
+ There are no comments
Add yours