சென்னை: சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது.
நாட்டின் 78வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டைகொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவார். சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம். இந்த ஆண்டும் சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகியவை நேற்று அறிவித்தன.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கின்றன. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம்’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார். அரசு சார்பாக பங்கேற்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை தெரிவிப்பார் என்றும், திமுக கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
அதே நேரத்தில் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளன.
+ There are no comments
Add yours