திருப்பூர்: திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் முக்காடு போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அதிமுக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்களை திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று ( நவ. 28) தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கிய 2 நிமிடங்களில், அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை மற்றும் கருப்பு சேலை அணிந்து வந்து பேசத் துவங்கினர்.
இந்நிலையில், மேயர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, தீர்மானங்களுக்கு பிறகு பேசலாம் என சொல்லியபோதும் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பியப்படி, கையில் பதாகையை உயர்த்திப் பிடிக்க, அரங்கம் அமளி துமளியானது. தொடர்ந்து மேயரை பேச விடாமல் சொத்து வரியை திரும்ப பெற வேண்டும். மக்களை, தொழிலை வஞ்சிக்கும் சொத்து வரி விதிப்பு தொடர்பாக மாநகராட்சி சிறப்பு மாமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதையடுத்து மாமன்ற கூட்ட அறையின் தரையில் அமர்ந்து, திமுகவுக்கு எதிராகவும், சொத்து வரி விதிப்பு தொடர்பாக தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார். இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் கையை தட்டி ஆதரவு தெரிவித்தனர். சொத்து வரி விதிப்பு தொடர்பாக தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜகவினரும் எதிர்ப்பு குரல் தெரிவிக்கவே, 15 நிமிடங்களில் மாமன்ற கூட்டம் நிறைவடைந்தது.
தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் அவையில் அமர்ந்து, ஆண், பெண் கவுன்சிலர்கள் முக்காடு போட்டபடி திமுக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து அன்பகம் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “திராவிட மாடலில் ஜனநாயகத்துக்கு இடமுண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் மக்கள் கருத்தை மாமன்றத்தில் பிரதிபலிக்க இடம் தரமறுக்கிறார்கள். மக்கள் மற்றும் தொழிலை வஞ்சிக்கும் சொத்து வரியை திரும்ப பெற வேண்டும்.” என்று அன்பகம் திருப்பதி கூறினார்.
தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண் கவுன்சிலர்கள் தரையில் படுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸாரும் சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபடவே போலீஸார் அவர்களை சமாதானப் படுத்த முயன்றனர். ஆனால் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பவே, குண்டுகட்டாக அனைவரும் 2 வாகனங்களில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதில் கவுன்சிலர்கள் 25 பேர் மற்றும் பெண் கவுன்சிலர்கள் 10 பேர் என்பன உட்பட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு, மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களை, பல்லடம் தொகுதி அதிமுக எம்எல்ஏ, எம்எஸ்எம் ஆனந்தன், வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இத்தனை நாள் இல்லாமல் அரசியலில் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளவே, அதிமுக இப்படி செய்கிறது. மத்திய அரசின் கொள்கையால் வரி உயர்வு அமல்படுத்தப் படுகிறது. கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோரின் கோரிக்கை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தப்படும். வரி உயர்வு தொடர்பாக விளக்கம் தர தயாராக இருந்த நிலையில், அவர்கள் அதனை கேட்க முன்வராமல் குந்தகம் ஏற்படுத்தி உள்ளனர்.” என்று மேயர் தினேஷ்குமார் கூறினார்.
+ There are no comments
Add yours