எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக முறையிட தலைமை செயலகத்துக்கு அதிமுக எம்எல்ஏக்கள் வருகை புரிந்துள்ளனர். அதிமுக துணை கொறடா ரவி, முன்னாள் அமைச்சர்கள் ஓஎஸ் மணியன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் தலைமை செயலகம் சென்றுள்ளனர். சபாநாயகர் அப்பாவை சந்தித்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ள நிலையில், அப்பொறுப்புக்கு ஆர்பி உதயகுமாரை நியமிக்க கோரிக்கை வைக்க உள்ளனர்.
இதனிடைய, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகிற அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடும் என்றும், அன்று நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீனங்களுக்கு மானிய கோரிக்கைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உள்ளார் என்று குறிப்பிட்டார்.
மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் இருக்கைகளில் ஏதேனும் மாற்றம் வருமா.? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பழையபடியே இருக்கைகள் அமைக்கப்படும். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுக சார்பில் இருந்து எந்த கோரிக்கைகளும் மீண்டும் வரவில்லை என கூறினார். இதனால் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அமரும் இருக்கைக்கு அருகே துணை தலைவர் இருக்கையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமரவுள்ளார்.
இதற்கு முன்னதாக அதிமுக சார்பில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் தான் அந்த இருக்கையில் அமரவைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், எதிர்கட்சி துணை தலைவராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில். வரும் 9ம் தேதி சட்டப்பேரவை கூடும் நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஆர்பி உதயகுமார் இருக்க வேண்டும் என சபாநாகரிடம் கோரிக்கை வைக்க தலைமை செயலகம் சென்றுள்ளனர் அதிமுக எம்எல்ஏக்கள்.
+ There are no comments
Add yours