பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ள நிலையில் புதிய நீதி கட்சி, பாஜக கூட்டணியிலேயே தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
பல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் நிலவி வந்தது. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுமா அல்லது பாஜகவுடன் அவர்களது கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில், அதிமுக வெளியேறிய பிறகு எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கூட்டணியில் இணையும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.
+ There are no comments
Add yours