தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் தென்காசியில் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கரைகள் சேதமடைந்தன. மேலும் வெள்ளம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ஐந்தருவி, புலியருவியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் அருவியின் ஓரத்தில் நிற்கலாம். அங்கிருந்தே குளிக்கலாம் எனக் கூறப்பட்டது.
இதன்படி தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு அனைத்து அருவிகளிலும் சீராக வந்து கொண்டிருப்பதால் இந்த உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று டிசம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை ஒட்டி குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொளுத்தும் வெயிலில் நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் உற்சாகக் குளியல் போட்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours