அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – செல்வபெருந்தகை

Spread the love

சென்னை: அம்பேத்கர் குறித்து தனது வக்கிர கருத்துக்களை கூறிய அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய திருநாட்டில் யாராக இருந்தாலும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் அரசியல் நகர்வுகள் நடப்பதில்லை என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும், பாபாசாகேப் அவர்களைப் பற்றி மாநிலங்களவையில் அமித்ஷா பேசியவை சங் பரிவார் கூட்டத்தின் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களை இகழ்வதால் அவருடைய புகழ் மறைய போவதில்லை. அமித்ஷா மட்டுமல்ல, யார் வந்தாலும் அவரது புகழை அழிக்கவோ தவிர்க்கவோ இயலாது. இன்றும் என்றும் என்றென்றும் தேவையாக இருக்கிறது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தியல்.

அமித்ஷா சார்ந்திருக்கும் சங் பரிவார கூட்டத்திற்கு பாபா சாகேப் இயற்றிய இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதின் வெளிப்பாடு தான் அமைச்சரின் இந்த ஆணவப் பேச்சு. அம்பேத்கர் குறித்து தனது வக்கிர கருத்துக்களை கூறிய அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய அமித் ஷா, “பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு “பேஷன்” ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்’ எனப் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours