தோளில் அமர்ந்து கொண்டு காதைக் கடிக்கும் அண்ணாமலை….செல்லூர் ராஜு

Spread the love

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதை அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்துக்கொண்டாடினார்கள். மேலும், ’நன்றி மீண்டும் வராதீர்கள்’ என அதிமுக ஐடி விங்க் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங் செய்தது. இதற்கெல்லாம் போட்டியாக ஒரு சில மாவட்டங்களில் பாஜகவினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

இவை அனைத்திற்கும் காரணம் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கள்தான். அண்ணா குறித்த கருத்திற்கு திமுக மல்லுக்கு வரும் அண்ணாமலை எதிர்பார்த்த நிலையில், மாறாக அதிமுக அண்ணாமலையுடன் மல்லுக்குச் சென்றது.

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றவர்கள் அண்ணாமலைக்கு எதிராகப் பேசினாலும், செல்லூர் ராஜு, ‘’அண்ணாவை பற்றி யார் பேசினாலும் அவர்களின் நாக்கு அறுக்கப்படும்’’ என ஆவேசமாகக் கொந்தளித்தார். பிரச்சினை உக்ரமாவதைத் தொடர்ந்து, “பாஜக கூட்டணி குறித்து எத்தகைய விமர்சனத்தையும் வைக்க வேண்டாம்” என ஈபிஎஸ் தரப்பிலிருந்து அதிமுகவினருக்கு அன்புக் கட்டளை போடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அப்படியும் அடங்காத கோபத்தில் இருந்த செல்லூர் ராஜு, காமதேனுவிடம் பேசினார். இனி அவரது பேட்டி…

அண்ணாமலை மீதுள்ள கோபத்தை ’அண்ணா’ வைக் கொண்டு கொட்டித் தீர்க்கிறீர்களா..?

அண்ணாமலை மீது எங்களுக்கு என்ன கோபம். யாராக இருந்தாலும் மறைந்த தலைவர்கள் குறித்துப் பேசுவது தவறு. மேலும், நடக்காத ஒன்றை தவறாகச் சித்தரித்து அண்ணாவின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் பேசினால் நாங்கள் சும்மா இருக்க முடியுமா? பேரறிஞர் அண்ணா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நெசவாளர் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய உழைப்பாலும் தனது முயற்சியாலும் படித்தவர்; முதுகலை பட்டம் பெற்றவர்.

இந்த நாட்டில், நடந்தால் தீட்டு, பேசினால் தொட்டால் தீட்டு, பட்டால் பாவம் என்று இருந்த நிலையை மாற்றிய தலைவர்களில் ஒருவர் அண்ணா. அவரது வரலாறு தெரியாமல் பொய்யான கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டால் சும்மா இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் வரலாறு தெரிந்து பேசவேண்டும்.

அதற்காக நாக்கை அறுப்பேன்… நாக்கு அழுகிவிடும் என்றெல்லாம் எகிறுவது சரியா?

அதெல்லாம் ஒரு ஆவேசத்தில் பேசுவதுதான். நாங்கள் பெரிதும் வணங்கும், போற்றும் தலைவர் அண்ணா. எங்கள் கட்சியின் பெயரிலும், கொடியிலுமே அண்ணாவைத் தாங்கியுள்ளோம். அப்படிப்பட்ட தலைவரை இழிவாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஆவேசத்தில் பேசியதுதான் அந்த வார்த்தைகள்.

பாஜக – அதிமுக கூட்டணி இன்னமும் தொடர்கிறதா?

நிச்சயமாக தொடர்கிறது. பிரதமர் மோடி அவர்கள் நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். தற்போது கூட நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முன்னோடியே எங்கள் அம்மாதான். அவர் வழியில் இன்றைக்கு பிரதமர் மசோதாவை தாக்கல் செய்துள்ளது மகிழ்ச்சி.

நாங்கள் மத்தியில் மோடி வர வேண்டும் என்று நினைக்கிறோம். அதேபோல் மாநிலத்தில் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று தமிழக பாஜக நினைக்க வேண்டும். ஆனால் அண்ணாமலை, மக்களவைத் தேர்தலில்தான் நாங்கள் கூட்டணி. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் என்கிறார்.

அதையெல்லாம் கேட்டு நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமா? எங்கள் தோளில் அமரவைத்து இருக்கிறோம். ஆனால், எங்கள் காதையே கடித்தால் கீழே தூக்கிப் போட்டுவிட மாட்டோமா? பாஜக எங்களது காதை கடித்தால் நாங்கள் தூக்கி கீழே எறிந்து விடுவோம்.

அதேசமயம், கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு. நாங்கள் கொண்ட கொள்கையை, எங்கள் தலைவர்களை தவறாகப் பேசினால் யாராக இருந்தாலும் சும்மாவிடக்கூடாது என்பது எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் அறிவுறுத்தல். அதன்படி நாங்கள் நடக்கிறோம். கூட்டணிகளுக்குள் இந்த மாதிரியான கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். நாங்கள் என்ன திமுக கூட்டணியா? அனைத்துக்கும் ஆமா போட!

அண்ணாமலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

அண்ணாமலை நான் ஐபிஎஸ் படித்தவன் என்று அடிக்கடி கூறுகிறார். படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது போல, அண்ணாமலை பாஜக கட்சியை கெடுத்துக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலையின் செயல்பாடுகள் பாஜகவை வளர்ப்பது போல் தெரியவில்லை. அவர் தன்னை முன்னிலைப்படுத்துவதில் தான் கவனமாக இருக்கிறார். தனக்கு வரும் கூட்டத்தை கண்டு மிதப்பில் இருக்கிறார். இந்தக் கூட்டமெல்லாம் ஓட்டாக வருமா?

புரட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோது, கருணாநிதியின் பொதுக்கூட்டங்களுக்கு அதிகமான கூட்டம் கூடும். அப்போது கருணாநிதியே, “இவ்வளவு கூட்டம் எனக்குக் கூடுகிறீர்கள். ஆனால் ஓட்டை எல்லாம் எம்ஜிஆருக்குப் போட்டுவிடுகிறீர்கள்” என்று கூறுவார். அண்ணாமலை அரசியல் களத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இவர் பேசுவதை எல்லாம் மத்திய தலைமை கண்டித்திருக்க வேண்டும். கண்டிக்கும் என நம்புகிறோம்.

திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசுகிறார். நாங்கள் பதிலுக்கு பாஜகவை ஒழிக்க வேண்டும் என்றால் சும்மா இருப்பாரா? எங்களுக்கு வெற்றியை விட தன்மானம் தான் முக்கியம் என்பதை அண்ணாமலை புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது.

அண்ணா விவகாரத்தில் திமுக அமைதி காத்ததே..?

அவர்களுக்குப் பயம். ரெய்டு வந்துடும்ல… அந்தப் பயம். அண்ணா குறித்து ஒருவர் கேவலமாகப் பேசும்போது திமுகவினர் துளி அளவு கூட கொதித்து எழவில்லை. மானம், ரோஷம், சூடு சொரணை அவர்களுக்கு இருக்கிறதா என கேட்கத்தோன்றுகிறது. அண்ணாவின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா… தந்தை பெரியாரின் ஆன்மா இவர்களை எப்படி மன்னிக்கும்? அண்ணாமலையுடன் இவர்கள் ரகசியக் கூட்டணியில் இருக்கிறார்கள். மோடி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் அதில் மந்திரி பதவி பெறவும் இவர்கள் ஆயத்தமாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால், திமுக வரலாறு அப்படி.

அண்ணாவின் கொள்கைகளை அதிமுக பின்பற்றவில்லை, திமுக குறித்து பேச செல்லூர் ராஜு போன்றவர்களுக்கு அருகதை இல்லை என அமைச்சர் உதயநிதி சாடியிருக்கிறாரே..?

விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவர் தற்போது விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக இருக்கிறார் அல்லவா அதனால் அவர் அப்படித்தான் பேசுவார். அண்ணா குப்பனையும் சுப்பனையும் பதவி கொடுத்து அழகு பார்த்தவர். சாதாரண தொண்டனைக்கூட கோபுரத்தில் வைத்து அழகு பார்த்தவர். அவரைப் பின்பற்றி அதே வழியில் நடந்தார்கள் எங்கள் புரட்சித்தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும். ஆனால், திமுகவில் அப்படி இருக்கிறதா… அண்ணாவின் வழியை இவர்கள் பின்பற்றுகிறார்களா… அவர் காட்டிய சமூகநீதியின் படிதான் இவர்கள் நடக்கிறார்களா?

இவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனை தீண்டாமை நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. வேங்கைவயலில் உண்மைக் குற்றவாளிகளை இவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இப்படி இருக்கையில் உதயநிதி எப்படி சமூக நீதி பற்றி பேச முடியும். எனக்குப் பின் யாரும் என் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வரமாட்டார்கள் என இவரது தந்தையும், நான் அரசியலுக்கு வரமாட்டேன் என இவரும் சொன்னார்களே… செய்தார்களா? அதனால் அதிமுக குறித்து பேச எந்த தகுதியும் உதயநிதிக்கு கிடையாது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours