பழனி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.. தா. பூவேந்தன், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த 1996 முதல் 2001 வரை திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தா.பூவேந்தன் விவசாயிகள், பொதுமக்களுக்காக பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2001ல் திமுக சார்பில் பூவேந்தனுக்கு சீட் வழங்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்தார். இதனால், 2006ல் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. தொடர்ந்து 2011ல் பழனி தொகுதி பொதுத் தொகுதியாக மாறிய நிலையில், அப்போதும் பூவேந்தனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய பிறகு அக்கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ பூவேந்தன் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் பூவேந்தன். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ பூவேந்தனுக்கு கட்சிக்கொடி, துண்டை அணிவித்து வரவேற்றுள்ளார் அண்ணாமலை.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை..
“பழநி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் ஆயக்குடி தா. பூவேந்தன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியாலும், தலைமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் முன்னிலையில், கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அண்ணன் பூவேந்தன் அவர்களை மனமார வரவேற்று மகிழ்கிறோம். அவரது வருகை, தமிழ்நாடு பாஜகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours