பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Spread the love

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விடிய விடிய மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கம் சிக்கியது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்களிடம் பல்வேறு பணிகளுக்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சமாக பரிசு பொருட்களைப் பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தமிழகம் முழுவதும் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சங்கர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 10-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவு அறைகள் மற்றும் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது, இரவு 10 மணியளவில் நகராட்சி அலுவலக உதவியாளர் சரத், திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தனர். அங்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் வலிப்பு வந்தவருக்கு உடல் நிலை சரியானதால் ஆம்புலன்ஸில் வந்த மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் அளித்து விட்டு திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையே, விடிய, விடிய நடைபெற்ற சோதனை இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவு பெற்றது. இதில், நகராட்சியின் நகரமைப்பு பிரிவில் ரூ.1.66 லட்சம், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.34,700 என, கணக்கில் வராத 2 லட்சத்து 700 ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ராஜ்குமார், குமாரவேல் மற்றும் ஊழியர் சரத் பாபு ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours