தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழக தலைவர்களின் பிரச்சாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கின்றனர்.
ஏற்கெனவே பிரதமர் மோடி இம்மாத தொடக்கத்தில் தமிழகத்தின் திருப்பூர், சேலம், கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரதமர் மோடியைத் தொடர்ந்து பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதல்கட்டமாக ஏப்ரல் 4, 5 ஆகிய இரு தினங்கள் அமித் ஷா தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அதன்படி, ஏப்ரல் 4-ல் தமிழகம் வரும் அவர் மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 5-ல் சென்னையின் பல பகுதிகளிலும் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷாவின் பிரச்சாரம் அமையும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
+ There are no comments
Add yours