சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீஸார் இன்று (புதன்கிழமை) கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது.
கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திரைமறைவில் இருந்து மூளையாக செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார் என்பதை கண்டறிய புலனாய்வு முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
+ There are no comments
Add yours