சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளராக, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி, சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, சென்னைக்கு நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர், பட்டியலின சமூகத்தினர், தலித் அமைப்பினர் என ஏராளமானோர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் போலீஸாரிடம் சரணடைந்தவர்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
மேலும், இந்தக் கொலை சம்பவத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலையை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதேபோல் மேலும் சில கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் இந்த வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து அக்கட்சியினர், பட்டியல் சமூக மக்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், மாநில தலைவராக வழக்கறிஞர் சி.ஆனந்தன், மாநிலத் துணைத் தலைவராக டி.இளமான் சேகர், மாநில பொருளாளராக கமலவேல் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாநில கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours