மனித உரிமைப் போராளி, தோழர் அருந்ததி ராய் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய டெல்லி ஆளுநர் அனுமதித்துள்ளதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அருந்ததி ராய் மீது பாய்ந்த வழக்கு :
டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுத்தாளர் அருந்ததி ராய்,காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத், உசைன், உள்ளிட்ட சில தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது
மேலும் கடந்த 2013ம் ஆண்டு அருந்ததிராய் பேசியது தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது.
இந்நிலையில், அருந்ததி ராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர் மீது 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மனித உரிமைப் போராளி, தோழர் அருந்ததி ராய் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய டெல்லி ஆளுநர் அனுமதித்துள்ளதற்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..
கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் பேசியதற்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு, வழக்கு பதிவதென்பது பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையேயாகும்.
அக்கருத்தரங்கில் அன்புச்சகோதரி அருந்ததிராய் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை, பின்னர் இணைக்கப்பட்டது என்று பேசியது வரலாற்று உண்மையாகும். அதனை பேசியதற்காக இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவதென்பது சனநாயகப் படுகொலையாகும் கருத்துச்சுதந்திரம், பேச்சுரிமை ஆகியவை இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும்.
அரசுக்கு எதிராகப் பேசினாலே வழக்கு பதிவதும், சிறையிலடைத்து கொடுமை புரிவதும்தான் பத்தாண்டுகால பாஜக அரசின் ஒற்றை சாதனையாகும். கல்புர்கி, கௌரி லங்கேஷ் என தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தாலே கொலை செய்யும் பயங்கரவாதிகளை சுதந்திரமாக உலவ அனுமதிக்கும் கொடுங்கோலர்களின் ஆட்சியில் மனித உரிமை போராளிகள் பயங்கரவாதிகளாகத் தெரிவதில் வியப்பில்லை.
பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிற்கு ஒவ்வொரு நாளும் இடையூறு அளித்து சனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் பணியை செவ்வனே புரிவதோடு, தற்போது கூடுதலாக சமூக அநீதிக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் சட்டவிரோதச் செயலிலும் ஈடுபட்டுள்ளது அதிகார அத்துமீறலின் உச்சமாகும். அதனை பின்புலத்திலிருந்து தூண்டும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கிற்கு வரும் நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஆகவே, மனித உரிமைப்போராளி தோழர் அருந்ததிராய் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கினை டெல்லி ஆளுநர் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours