சென்னை: திமுக ஆட்சியில் இதுவரை 4 ஆண்டுகளில் 113 நாட்கள்தான் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ முதலமைச்சர் அவர்கள் நேற்று உண்மைக்கு புறமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஆதரவாக பேசியுள்ளதாக கூறி இருந்தார். தம்பிதுரை இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார். அவர் பேசியதில் மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கனிம சுரங்க ஒதுக்கீட்டில் பெரிய ஊழல் நடந்தது.
ஆனால் ஏலமுறையை கொண்டு வந்ததை ஆதரித்து தம்பிதுரை பேசினார். அதில் என்ன தவறு உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அரிய வகை கனிமங்களை ஏலம் விடும் உரிமையை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளாரே தவிர, கனிம சுரங்கங்கள் விதிகள் திருத்த சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும் என்றோ, மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக்கூடாது என்றோ வலியுறுத்தவில்லை.
2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்துவோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அப்படி பார்த்தால் இதுவரை 4 ஆண்டுகளில் 400 நாட்கள் பேரவை நடந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை 113 நாட்கள்தான் கூட்டத் தொடர் நடந்து உள்ளது. 4 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரை இப்போது 2 நாட்களில் முடித்துவிட்டனர்” என குற்றம்சாட்டினார்.
+ There are no comments
Add yours