தமிழக பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சிகள் நடத்த தடை

Spread the love

சென்னை: சென்னையில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சிகளையும் அனுமதி இன்றி நடத்த கூடாது என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட்28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்ட மகாவிஷ்ணு என்ற தன்னம்பிக்கை பேச்சாளர், பாவ – புண்ணிய பலன்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவை மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்றும் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கர் என்றமாற்றுத் திறன் ஆசிரியருடன் மகாவிஷ்ணு வாக்குவாதமும் செய்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள், வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாணவர்களை தவறாக வழிநடத்துவதா என கேள்வி எழுப்பி, அசோக் நகர் பள்ளி முன்பு, பல்வேறு மாணவர் அமைப்பினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழலில், பள்ளிக்கல்வி துறை சார்பில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ‘கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத் திறன் ஆசிரியர் சங்கருக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியபோது, ‘‘இந்த விவகாரம் தொடர்பாகபள்ளிக்கல்வி துறை இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீதுதுறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும். என்னுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் அவரை பேச அனுமதித்ததாக கூறுவது தவறான செய்தி’’ என்றார்.

நிகழ்ச்சிக்கு பிறகு, 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.தமிழரசி, திருவள்ளூர் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம், செங்கல்பட்டுஅணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசோக் நகர் பள்ளி ஆசிரியர்கள் நேற்று மதியம்வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின்தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் அறிந்துகொள்ள தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் நமது பாடநூல்களில் உள்ளன. எதிர்கால சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலை கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக் கூறமுடியும். அதற்கு தேவையான புத்தாக்க பயிற்சியை துறைசார் வல்லுநர்களை கொண்டு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர, பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறை செய்வதற்கு, புதிய வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூகமேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கை: இதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும் காணொலியில் உடனடியாக ஆலோசனை நடத்தினார். ‘‘பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் கல்வி சார்ந்து இயங்குபவர்களாக இருக்க வேண்டும். துறை அனுமதியின்றி தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்களின் பயிற்சி முகாம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. சுற்றறிக்கைகூட சரியாக தயாரிக்க தெரியாத சிலரால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை 3 நாட்களில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சிகளையும் முறையான அனுமதி இன்றி நடத்த கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை செயலர் மதுமதியும் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையில் புகார்: இதற்கிடையே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ‘பரம்பொருள்ஃபவுண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28-ம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவின்போது, மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில்பேசியுள்ளார். எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படியும் மகாவிஷ்ணுவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours