சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், முன்னாள் நீதிபதி சந்துருவின் பள்ளிகளில் சாதி பாகுபாடு ஒழிப்பு பரிந்துரை அறிக்கையை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்காகவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குமாறு ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்நிலையில் முன்னாள் நீதிபதி சந்துரு பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்து தனது பரிந்துரை அறிக்கையை தமிழக அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் பள்ளிகளில் சாதிப் பெயர்களை நீக்குதல், மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவது, நெற்றியில் திலகம் இடுவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த பரிந்துரைகளில் மாணவர்கள் வண்ணக் கயிறு அணிவது, நெற்றியில் திலகமிடுவது போன்றவற்றை தடை செய்வது என்பது இந்த மத பழக்கவழக்கத்தின் மீதான அடக்குமுறையாகும் என பாஜக இந்த பரிந்துரைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், 134வது வார்டின் பாஜகவை சேர்ந்த கவுன்சிலர் உமா ஆனந்த், மாமன்ற கூட்டத்தில், முன்னாள் நீதிபதி சந்துருவின் பரிந்துரை அறிக்கையை கிழித்தெறிந்தார்.
இதனைக் கண்ட அரங்கிலிருந்த திமுக கவுன்சிலர்கள், அவரை வெளியேற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து கவுன்சிலர் உமா ஆனந்த் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதற்கிடையே கவுன்சிலர் உமா ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் மேயர் பிரியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
+ There are no comments
Add yours