செந்தில் பாலாஜியின் உருட்டல்களுக்கு பாஜக அசராது- அண்ணாமலை

Spread the love

சென்னை: மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை கேட்டால் வழக்கு தொடருவோம் என்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பாஜக பணியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, ‘வழக்கு தொடருவோம்’ என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படாமல், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தமிழக மின்சார வாரியத்துடனான வழக்கு காரணமாக அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை, திமுக ஆட்சியில் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டியே தீர வேண்டும்.

அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது வார்த்தை விளையாட்டின் மூலம், அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை. மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவின்படியே, ரூ.568 கோடி கட்டணம் செலுத்தியதாகக் கூறும் அமைச்சர், கடந்த 2019-ம் ஆண்டு, மேல்முறையீட்டு ஆணையத்தின் இதே உத்தரவை, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2021-ம் ஆண்டு நிராகரித்ததை மறந்து விட்டார்.

அதானி நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக, ரூ.544 கோடி ஒரு முறை வருவாயும், ரூ.205 கோடி, தாமதக் கட்டணமும் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெற்றதாகக் கூறப்பட்டிருப்பதை மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா? உண்மையில் அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிப்பாரா? அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?

அதானி நிறுவனத்திடம், தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையான ரூ.7.01 விலையிலேயே மின்சாரம் வாங்கிக் கொண்டு, அதற்காக, கடந்த நிதியாண்டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதாக, அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, எந்த அடிப்படையில், ரூ.5.10-க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்று திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாகக் குறிப்பிடுகிறார் அமைச்சர்?

மத்திய அரசிடம் மட்டுமே சூரிய ஒளி மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.2.61 என்ற விலையில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், வேறு தனியார் நிறுவனங்களிடம் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று கூறிவிட்டு, நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் அடிப்படையில் மின்சாரம், யூனிட் ஒன்றிற்கு ரூ.3.45 முதல் ரூ.5.31 வரை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்கள் மூலமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர். இந்த தனியார் நிறுவனங்களில் அதானி நிறுவனம் உள்ளதா இல்லையா?

திமுகவின் வரலாறும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வரலாறும் உலகறிந்த உண்மை. எனவே, திமுக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கேள்வி எழுவது இயல்பு. அரசின் தவறுகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்துச் செலவிடும்போது, மக்கள் நலன் சார்ந்த கேள்விகள் எழத்தான் செய்யும். அதற்குப் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. அதை விடுத்து, வழக்கு தொடருவோம் என்ற உருட்டல் மிரட்டல்கள் எல்லாம், எந்தத் தவறையோ மறைக்க நடக்கும் முயற்சியாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதையும், இதற்கு எல்லாம் தமிழக பாஜக பணிந்து செல்லாது என்பதையும் அமைச்சருக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours