மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்களின் சடலங்கள் சனிக்கிழமை காலை கரை ஒதுங்கியது.
சென்னையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அண்ணா நகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் படித்து வருகின்றனர். அதில், பி.காம்., 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 17 பேர் 9 பைக்குகளில் வெள்ளிக்கிழமை காலை மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். பின்னர், புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு, கடற்கரை கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரையொட்டி ஒரு படகில் அமர்ந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், மாலை 4 மணிக்கு 17 பேரும் இசிஆர் சாலையொட்டி உள்ள கடலில் இறங்கி ஜாலியாக குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை அயனாவரத்தை சேர்ந்த ரோஷன் (19), சூளையை சேர்ந்த பிரகாஷ் (19), சேத்துபட்டை சேர்ந்த கவுதம் (19), ஆகிய 3 பேரையும் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த, அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் ராட்சத அலையில் சிக்கி நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த, திருப்போரூர் அடுத்த காலவாக்கம் தீயணைப்பு நிலைய(பொ) அலுவலர் ஆனந்தன் தலைமையில், 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படகு மூலம் கடலுக்கு சென்று ரோஷனை மீட்டு கரைக்கு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, ரோஷனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார். மேலும், மாயமான கல்லூரி மாணவர்கள் பிரகாஷ், கவுதம் ஆகியோர் உடலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் போலீஸார் படகு மூலம் கடலுக்கு சென்று நேற்று இரவு முழுவதும் தீவிரமாக தேடினர். ஆனாலும், 2 பேர் சடலம் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் கடற்கரையில் இன்று காலை 19 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்களின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்ததில் மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவர்கள் பிரகாஷ் (19), கவுதம் (19), என போலீஸாருக்கு தெரிந்தது. 2 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
+ There are no comments
Add yours