என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ்.. பேச்சுவார்த்தை தோல்வி

Spread the love

புதுச்சேரி: என்எல்சி நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கக் கோரி புதுச்சேரியில் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.1.50 லட்சம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் என்ற அடிப்படையில் ஒரு மாத சம்பளமான ரூ.20,908 போனஸ் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர். மேலும், நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை தாங்களும் செய்வதால் அவர்களுக்கு வழங்கப்படுவது போல் தங்களுக்கும் ரூ.1.50 லட்சம் போனஸ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் துறை துணை ஆணையரிடம் அவர்கள் மனு அளித்தனர். அதன் அடிப்படையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் அலுவலகத்தில் போனஸ் தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தை இன்று நடந்தது. உதவி ஆணையர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார்.

இதில் என்எல்சி நிர்வாகம் சார்பில் உதவி முதன்மை மேலாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டார். சிஐடியு பொது ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி, பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், இன்றைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வி அடைந்தது.

இதுகுறித்து சிஐடியு பொது ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் கூறுகையில், ”என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு போனஸ் ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. இதே போனஸ் தொகையை சொசைட்டி ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் துணை ஆணையரிடம் தொழில் தாவா எழுப்பப்பட்டது. இந்த தொழில் தாவா புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் துறை உதவி ஆணையருக்கு மாறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உதவி ஆணையர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் எந்த உடன்பாடும் எற்படவில்லை. இதனால் மறு தேதி குறிப்பிடாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 17-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours