சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ‘மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், தேர்தல் பிரச்சாரம் கடந்த ஏப்ரல் 17-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தயாநிதி மாறன் சார்பில் வாக்குப்பதிவு நாளான கடந்த ஏப்.19-ம் தேதியன்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இது ஜனநாயக முறைப்படியான தேர்தலில் வாக்காளர்களை திசை திரும்பும் செயல் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிரானது.
மேலும், அவர் தேர்தல் பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்டுகளுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.95 லட்சத்தை விட அவர் அதிகப்படியான தொகையை செலவிட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறவில்லை. எனவே, இந்த தொகுதியில் தயாநிதிமாறன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்,’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours