மதுரை: தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீம் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியதாவது: தமிழக முதல்வர் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ரூ.7,616 கோடி மதிப்பில் 11,516 பேருக்கு வேலையளிக்கும் 19 ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளார். சென்னையில் ஃபோர்டு கார் தொழிற்சாலை மீண்டும் இயங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது இலங்கை கடல் கொள்ளையர்களும் தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாக பார்க்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு மொட்டை அடித்து அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மிகவும் மோசமான நிலையில் நடத்தப்பட்டு இருக்கிறார்கள். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் இதனை கண்டிக்கும் விதமாக டெல்லியில் இருக்கும் இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவரது கோரிக்கையை தெரிவித்தார். கேள்வி கேட்ட தொழிலதிபரை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்து, மத்திய நிதி அமைச்சரும், பாஜக எம்எல்ஏ வானதியும் அவமானப்படுத்தியுள்ளனர். தமிழக முதல்வரின் வெளிநாடு பயணத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். தமிழக முதல்வர் ஏற்கெனவே பல நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். தற்போது தமிழக நலனுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழக முதல்வர் இன்பச் சுற்றுலா செல்லவில்லை. முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் தோல்வி என்று கூறுவது நல்ல அரசியல் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours