ஓட்டேரி பிரிக்ளின் சாலை – வாகன ஓட்டிகள் கடும் அவதி! சீரமைப்புகளை மேற்கொள்ள மக்கள் வலியுறுத்தல்!

Spread the love

சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ஓட்டேரி ஸ்ட்ராஹன்ஸ் (பட்டாளம்) சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் ஓட்டேரி பிரிக்ளின் சாலை வாகன நெரிசலில் மூழ்கியுள்ளது. செங்குன்றம், ரெட்டேரி, திருவிக நகர், மாதவரம், மூலக்கடை என பெரம்பூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் வள்ளலார் நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் முக்கிய சந்திப்பாக இருப்பது ஓட்டேரிதான். இதேபோல, மறுமார்க்கமாக வரும் வாகனங்களுக்கும் இந்த ஓட்டேரி சந்திப்புதான் முக்கிய வழித்தடமாகும்.

தற்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பட்டாளம் ஸ்ட்ராஹன்ஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஓட்டேரியில் வந்து குவியும் வாகனங்கள் சாரை சாரையாக நெரிசலில் வரிசைகட்டி நிற்கின்றன. அயனாவரம் மற்றும் பெரம்பூர் மார்க்கங்களில் இருந்து வரும் பேருந்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான ஒரே வழி பிரிக்ளின் சாலைதான். இங்குதான் சிக்கலே ஆரம்பிக்கிறது. பொதுவாகவே குறுகிய பிரிக்ளின் சாலை இருவழிப் பாதை என்பதால் கடும் நெரிசலுக்கு பெயர்பெற்றது.

இங்குள்ள மொத்த விலை கடைகளுக்கு சரக்குகளை ஏற்றி இறக்க வரும் வாகனங்களை,சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து ஆங்காங்கே அப்படியே நிறுத்திவிடுகின்றனர். இதனால் எதிரெதிராக வரும் 2 பேருந்துகள் ஒரேநேரத்தில் எளிதாக கடந்து செல்லமுடியாமல் போகிறது. இதன் காரணமாக அடுத்தடுத்து வரும் வாகனங்களும் நெரிசலில் சிக்குகின்றன. இதேபோல, பிராய்லர் கோழிகளை இறக்கி செல்லும் வாகனங்களாலும் நெரிசல் ஏற்படுகிறது. அங்குள்ள குப்பை கிடங்குக்கு செல்ல வரும் மாநகராட்சி குப்பை வாகனங்களும் பிரிக்ளின் சாலையில் அவ்வப்போது வழியை மறித்து தங்கள் கடமையை செய்கின்றன. இதனாலும் நெரிசல் ஏற்படுகிறது.

ஓட்டேரியில் மயானம் இருப்பதால் நாளொன்றுக்கு ஒன்றிரண்டு இறுதி ஊர்வலமாவது பிரிக்ளின் சாலையில் வந்துவிடுகின்றன. மேளம் கொட்டி, பட்டாசு வெடித்து, மெதுவாக செல்லும்இந்த ஊர்வலங்கள் மயானத்துக்குள் செல்லும் வரை வாகன ஓட்டிகள் விழிபிதுங்கிவிடுகின்றனர். அமரர் ரத வாகனங்களும் மயான வளாகத்தை ஓட்டி சாலையோரம் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றத்துடன் சாலைகளில் சாக்கடை தேங்குகிறது. குறிப்பாக ஓட்டேரி மயானத்துக்கு முன்பு ஆரம்பித்து மேகலா தியேட்டர் பகுதி வரை கழிவுநீர் தேங்கியே உள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த கழிவு நீரை கவனமுடன்தான் கடக்கநினைத்து செல்வார்கள். ஆனால் அவர்கள் மீது சாகச பைக் ஓட்டும் சிலர் கழிவுநீரை பன்னீரைப் போல தெளிறித்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணாததால்அடிக்கடி அடைப்பு நீக்க இயந்திர வாகனம் வருவதாலும் நெரிசல் ஏற்படுகிறது. நிலைமை இப்படி இருக்க, இந்தசாலை வழியாக மொத்த வாகனங்களையும் திருப்பிவிடுவது பெரும் நெரிசலுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் தொடங்கி புரசைவாக்கம் நெடுஞ்சாலை வரை வரும் பிரிக்ளின் சாலையில் தேவையான சில சீரமைப்புகளை மேற்கொள்ள மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: சரக்கு வாகனங்கள் இரவில் மட்டுமே வந்து செல்லுமாறு கடைக்கார்களை போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்த வேண்டும். விதிமீறினால் அபராதம் விதிக்க வேண்டும். கடைகளுக்கு வருவோரின் வாகனங்களை கண்டபடி நிறுத்திவைக்க அனுமதிக்க கூடாது. மாநகராட்சி குப்பை வாகனங்களின் வருகை நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours