சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு சந்தையில் பூஜை பொருட்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோயம்பேடு மலர் சந்தை வளாகம் மற்றும் உணவு தானிய வளாகம் ஆகிய இடங்களில் கடந்த 18-ம் தேதி முதல் சிறப்பு சந்தை இயங்கி வருகிறது. இது, வரும் 27-ம் தேதி வரை செயல்பட உள்ளது.
சிறப்புச் சந்தையில் ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.30, 5 தென்னை ஓலை தோரணங்கள் கட்டு ரூ.10, ஒரு வாழை இலை ரூ.6, பூசணிக்காய் ரூ.50, மாவிலை கொத்து ரூ.10, துளசி கட்டு ரூ.10, இரு வாழைக் கன்று ரூ.30, சாமந்திப்பூ, மல்லிப்பூ முழம் ரூ.30, கனகாம்பரம் பூ முழம் ரூ.40, கதம்ப பூ முழம் ரூ.30, ஒரு படி பொரி ரூ.25, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.50, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.110, ஆப்பிள் கிலோ ரூ.120, சாத்துக்குடி ரூ.50, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.90, மாதுளை ரூ.120 மற்றும் 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.400, ஒரு கரும்பு ரூ.40 என விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பூஜை பொருட்கள் ஒரே இடத்தில் குறைந்த விலையில் கிடைப்பதால், நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் சிறப்பு சந்தையில் குவிந்தனர்.
புறநகரில் உள்ள பல்வேறு பெரிய தொழில் நிறுவனத்தினர் நேரடியாக கோயம்பேட்டுக்கு வந்து அதிக அளவில் பூஜைக்குதேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வந்ததால், அப்பகுதியில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
+ There are no comments
Add yours