சென்னை எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரில் கச்சா எண்ணெய் கலந்து வாகனங்கள் மீது படிந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மழை நீர் தானாகவே வடிந்துவிட்ட நிலையில், வடசென்னையின் பல்வேறு இடங்களில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீர் இதுவரை வெளியேறவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக புழல் ஏரி நிரம்பி வழிந்ததால் உபரி நீர் திறக்கப்பட்டு கொசஸ்தலை ஆறு வழியாக திறந்து விடப்பட்டது. இந்த நீர், எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் புயலின் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டதால் எண்ணூர் முகத்துவாரத்தில் கடல் உள்வாங்காமல், கொசஸ்தலை ஆற்றில் நிரம்பி வழிந்த தண்ணீர் திருவொற்றியூர், மணலி, சடையன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளில் புகுந்தது.
திருவொற்றியூரில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருவதால் அவற்றிலிருந்து வெளிவந்த கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் கச்சா எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளது. தண்ணீரில் கலந்த எண்ணெய் ஆனது திடீரென தீ பற்றி கொள்ளும் என்பதால் சமையலுக்கு கூட நெருப்பை பற்றவைக்க முடியாமல் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தண்ணீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகள் காரணமாக ஒரு வித எரிபொருள் வாசனை வருவதால் சுவாச பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகளை முறையாக அகற்றவேண்டும் என்றும், மழை நீரை வெளியேற்றவும், மின்சாரத்தை சீரமைக்கவும், சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+ There are no comments
Add yours