சென்னை: பணியின்போது சினிமா பிரபலங்களுடன் செல்பி, போட்டோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாரை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக பணி நேரத்தில் போலீஸார் (எஸ்.ஐ.க்கு கீழ் ரேங்கில் உள்ள காவலர்கள்) செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்புறம் நோக்கிய கண்காணிப்பு: அதுமட்டும் அல்லாமல் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், அந்த பிரமுகர்களை பார்த்து நிற்காமல் எதிர்புறம் நோக்கிய கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிக்கிய பெண் போலீஸ்: இதேபோல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் பணியின்போது சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், தலைவர்களுடன் புகைப்படம், செல்ஃபி எடுப்பது, ஆட்டோ கிராப் வாங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறுபவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் சிக்கிய பெண் போலீஸ் ஒருவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக காவல் துறையில் 35,329 பெண் போலீஸார் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 சதவீதம் பெண்கள். சட்டம்ஒழுங்கு, பாதுகாப்பு, ரோந்து பணி என ஆண், பெண் போலீஸார் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.
இவர்கள் மேலும், ஒருங்கிணைந்து கட்டுப்பாடுடன் சிறப்பாக எப்படி பணியாற்ற வேண்டும் என பல்வேறு வழிகாட்டல்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது.
பணிதிறனை அதிகரிக்க.. மேலும் பணித்திறனை அதிகரிக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படும் போலீஸார் அவர்களுக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டுள்ளது, எவ்வாறு பணியாற்ற வேண்டும் என முன்னரே பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு போலீஸார் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை மேலும் எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
+ There are no comments
Add yours