சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. நியாயவிலை கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு, ஒரு வாரத்தில் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 4-ம் தேதி தமிழகத்தின் வட கடலோர பகுதிகளை நெருங்கி வந்து, ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால்,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் தேங்கியதால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை அகற்றுதல், நிவாரணம் வழங்கும் பணிகள் உடனடியாக தொடங்கின. தூய்மைபணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைகளின் ஊழியர்கள், அலுவலர்களும் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள், மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தவர்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். ஆங்காங்கே நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, மக்கள் தங்கவைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அணுக முடியாத பெரும்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகும் நிலையில், ஒருசில பகுதிகள் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்புநிலை திரும்பிவிட்டது.
இந்த நிலையில், நிவாரணம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன்படி, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் ரொக்கமாக ரூ.6,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம் அறிவித்துள்ளார். கால்நடை உயிரிழப்புகள், பாதிக்கப்பட்ட படகுள், பயிர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்கப்படும். குடும்ப அட்டையில் ஒரு உறுப்பினர் மட்டும் இருந்தாலும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான விவரங்களை தொகுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் நிதி ஒதுக்குவதற்கான பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கரணை பகுதியில் மழை நிவாரண பணிகளை நேற்று ஆய்வு செய்த தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இதுதொடர்பாக 2 நாட்களில் அரசாணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்’’ என்றார்.
சென்னை அடுத்த மவுலிவாக்கம், பரணிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘மழைநீர் வடிகால் பணி குறித்துஎதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்கட்டும்.நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருப்போம்.முதல்வர், மேயர், அமைச்சர்கள்என அனைவரும் ஒற்றுமையாகபணியாற்றியுள்ளோம். பல பகுதிகளில் நியாயவிலை கடைகளிலேயேஇன்னும் தண்ணீர் தேங்கியுள்ளது.சேதங்களை சரிசெய்த பிறகு,முதலில் டோக்கன் வழங்க உள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில்வெள்ள நிவாரணம் வழங்கதொடங்கி விடுவோம்’’ என்றார்.
சென்னை மட்டும் வடசென்னை, தென்சென்னை என பொது விநியோக திட்டத்தில் நிர்வாக ரீதியாக 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், திருவள்ளூரின் 9 தாலுகாக்களில் 6,27,079 குடும்ப அட்டைகள், வடசென்னையின் 10 தாலுகாக்களில் 10,66,463, தென் சென்னையின் 9 தாலுகாக்களில் 11,51,661, காஞ்சிபுரத்தின் 5 தாலுகாக்களில் 4,01,645, செங்கல்பட்டின் 6 தாலுகாக்களில் 4,38,694 என மொத்தம் 36,75,542 குடும்ப அட்டைகள் உள்ளன.
இவற்றில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு நிவாரணம் வழங்கப்படஉள்ளது. ஏற்கெனவே மகளிர் உரிமை திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர், கார் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள் எனபல்வேறு நிலைகளில் வடிகட்டப்பட்டு குறிப்பிட்ட சதவீதம் பேருக்கே வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பிறகே, யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது தெரியவரும்.
+ There are no comments
Add yours