பொங்கல் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் வரும் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பார்வையாளர்கள் அனைவரும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை பூங்காவுக்கு கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு விடுமுறை நாட்கள் என்பதால், 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்பட பொங்கல் பண்டிகையின் அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்காக பூங்கா திறந்திருக்கும்.
நேரடியாக நுழைவுச் சீட்டுகளை பெற 10 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைனிலும் நுழைவுச்சீட்டு பெறலாம். கியூஆர் குறியீடு அடிப்படையில் நுழைவுச் சீட்டு பெறும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்புக்காக, அவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், பெற்றோரின் கைபேசி எண்ணுடன் கையில் அட்டை கட்டப்படும். பார்வையாளர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடத்தில் இருந்து பூங்காவுக்கு வர இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours