சென்னையில் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி – வழக்குப்பதிவு!

Spread the love

சென்னையில் உள்ள Sekhmet மதுபான விடுதியில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகிவுள்ளனர். அவர்களது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காகக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செய்ண்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் மதுபான விடுதியான Sekhmet ல் விபத்து ஏற்பட்டது. அதாவது நேற்று மாலை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சம்பவம் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே அந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட போதுதான் விபத்தில் சிக்கி 3 பேர் பலியான விஷயம் தெரியவந்தது. இதில் இரண்டு நபர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். விபத்து குறித்துப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிபுணர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி பொறியாளர்கள், சென்னை கிழக்கு காவல் இணை ஆணையர் தர்மராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் சம்பவம் குறித்து கிழக்கு காவல் இணை ஆணையர் தர்மராஜ் பேசியதாவது, “ மதுபான விடுதியில் இருந்த கான்கீரிட் துண்டு விழுந்துதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அது விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. அதற்கான நிபுணர்கள் வந்துதான் ஆய்வு செய்வார்கள். இந்த விபத்தில் மூன்று பேர் மட்டும்தான் சிக்கியுள்ளார்கள். அவர்கள் இந்த விடுதியின் பணியாளர்கள் ஆவார்கள். அதில் இருவர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours