சென்னை: சென்னை பார்முலா-4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆக.31 மற்றும் செப். 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைப்பது, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பார்முலா கார் பந்தயத்துக்காக கடந்த 2 நாட்களாக, தீவுத்திடல் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று (ஆக.31) மதியம் பார்முலா கார் பந்தயம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் போட்டி தொடங்குவது தாமதமானது. கார் பந்தயம் நடைபெறும் பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் இன்று (ஆக.31) மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த போலீஸார், சிவக்குமாரை உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிவக்குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கார் பந்தயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழந்த சம்பவம் மற்ற போலீஸார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours