வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்ட விதித்த தடை குறித்து அறிக்கை கேட்டது உயர்நீதிமன்றம் !

Spread the love

சென்னை: தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தியது குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்ட தடைவிதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனக்கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், வாகனங்களில் தடை செய்யப்பட்ட ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’ ஒட்டப்படுவதை தடுப்பதற்கும், அதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி அதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் வாகனங்களில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை ஒட்டுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் வரை சென்னை மாநகரில் ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’ ஒட்டியதாக 6 ஆயிரத்து 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல போக்குவரத்து விதிமீறல்கள், தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது தொடர்பாக 51 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை ரூ. 2 கோடியே 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வீதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தியது குறித்து காவல் துறை இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours