வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை பிடிக்க அமைச்சர் உத்தரவு!

Spread the love

சென்னையில் 13 பள்ளிகளைக் குறிவைத்து மர்ம நபர்கள் இன்று பிற்பகலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் சென்னையின் பல இடங்களில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், மிரட்டல் விடுத்த மர்ம கும்பலை கூண்டோடு பிடிக்க அமைச்சர் அன்பில் மகேஸ் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் அண்ணாநகரில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதியில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகள் மற்றும் பாரிமுனையில் உள்ள பள்ளிகள் என 13 பள்ளிகளுக்கு இன்று பிற்பகல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் பள்ளிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, பள்ளிகளில் இருந்து மாணவர்களை உடனடியாக அழைத்துச் செல்லும்படி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பின. தகவல் அறிந்து பதறிய பெற்றோர் பள்ளிகளில் குவிந்தனர். இதனால், அண்ணாநகர் மற்றும் ஜேஜே நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் போலீஸார் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் சென்னையில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours