சென்னை: விவசாயிகள், மீனவர்கள். வாகன உரிமையாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கனமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதியகாற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, வடதமிழக கரையை நெருங்கும். இதன் காரணமாக அக்.15 (இன்று) முதல் 17-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழைக்கும், சிலஇடங்களில் அதிகன மழைக்கும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின் பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கினார்.
இதில் பொதுமக்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் வருமாறு: விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கரமற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள்,கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.
முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகாவண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
பொய் செய்திகளை நம்பாதீர்! முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘‘வடகிழக்குப் பருவமழையை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம். சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ளுங்கள்’’ என கூறியுள்ளார்.
20,898 சிறப்பு போலீஸார்: இதற்கிடையே டிஜிபி சங்கர் ஜிவால்வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அதி விரைவுப்படை பயிற்சிப் பள்ளி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 20,898 போலீஸாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சிகளை வழங்கியுள்ளது. வெள்ளப் பெருக்கு,புயல், மிக கனமழை காலங்களில்எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, மக்களை பாதுகாப்பது, பேரிடர் நிகழ்ந்த பிறகு எவ்வாறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பயிற்சிகள் அளித்து தயார் நிலையில் வைத்துள்ளது.
இவர்கள், 136 பேரிடர் குழுக்களாக பிரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் மீட்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மருதம் வளாகத்தில் உள்ள மாநில காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதேபோல், அனைத்து மாநகர், மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக விடுப்பு எடுத்தவர்களை தவிர மீதம் உள்ள அனைவரும் பணிக்குத் திரும்ப தீயணைப்புத்துறை இயக்குநரும், டிஜிபியுமான ஆபாஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து மாவட்டதீயணைப்பு துறையினரும் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
+ There are no comments
Add yours