ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த கே.எஸ். அழகிரி !

Spread the love

தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் வரம்பு மீறிய செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியிருப்பது அவரது ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது எனவும் எந்த பிரச்சினையிலும் அரசமைப்புச் சட்ட அதிகார வரம்புகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 18-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அப்படியே ஆளுநர் கிடப்பில் போட்டு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அவரது தமிழக விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது எனவும் அதில் குறிப்பாக கூட்டுறவு சங்கங்களின் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைப்பது, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட முக்கிய கோப்புகளை கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது எனவும் இந்த விவகாரம் குறித்து பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் ? உயர்கல்வித்துறை அமைச்சரின் ஆலோசனை இல்லாமல், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக ஆளுநர் கடிதம் எழுதுவது அப்பட்டமான சட்டவிரோதச் செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours