பிரதமர் மோடியை அதிபரே என்று விளித்து மதுரை மற்றும் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் மத்திய பாஜக அரசு, இந்தியாவின் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்சி வருகின்றன. சர்வ அதிகாரம் படைத்தவராக பிரதமர் தன்னை உருவாக்கிக் கொள்கிறார் என்பது தான் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள் நாளை (செப்.17) கொண்டாடப்படுகிறது. இதனை இந்தியா முழுவதும் பாஜக தொண்டர்கள் வெகு உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பாஜகவினரும் மோடி பிறந்தநாள் கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ‘அகண்ட பாரதத்தின் அதிபரே’ என்று பிரதமரை விளித்து மதுரை மற்றும் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன மதுரை மாநகர் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கரிமேடு எஸ். அழகர்சாமி என்பவர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
அதில் ‘ஊழல் திராவிடத்தை விரட்டி தமிழகத்திலும் சனாதன ஆட்சியை மலரச் செய்யும் அகண்ட பாரதத்தின் அதிபரே உம்மை வணங்குகிறோம்’ என்று அச்சிடப்பட்டுள்ளது. மோடியை அதிபராக உருவகப்படுத்தி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பாஜகவினர் மட்டுமல்லாது பிற கட்சியினர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours