சென்னை: தீப்பெட்டித் தொழிலை கடுமையாக பாதிக்கும் சீனாவின் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: “விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் முக்கிய தொழிலாக விளங்குகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக, தீப்பெட்டி உற்பத்தித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 2022-ம் ஆண்டு செப்.8-ம் தேதி தாங்கள் கடிதம் எழுதி வலியுறுத்தினீர்கள். இதன் விளைவாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதற்காக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தற்போது சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வடமாநில நிறுவனங்கள் அதை தயாரிக்கும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து சிகரெட் லைட்டர்களை தயாரித்து ரூ.8 முதல் ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர். இதனால், மீண்டும் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்தச் சூழலில், அந்தமான் நிகோபார் தீவில் சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனையை தடை செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதேபோல், தமிழகத்திலும் அறிவிக்கை வெளியிட்டால் தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பரிசீலித்து ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். கடிதத்துடன் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் மனு, அந்தமான் நிகோபர் நிர்வாக அறிவிக்கை, கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக எழுதிய கடிதம் ஆகியவற்றை இணைத்து அனுப்பியுள்ளார்.
+ There are no comments
Add yours